சனி, 27 அக்டோபர், 2018

உணவுப் பழக்கங்களில் அரசியல் சாதி போன்றவை உள்ளதா அல்லது பொருளாதாரம் வாழ்வியல் முறை சார்ந்ததா?.
சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் உணவில் சாதி உணவில் அரசியல் இருப்பதாக ஒரு திரைப்பட இயக்குநர் கூறியதை வைத்து பெரும் விவாதம் நடைபெற்றுக்கொண்டுள்ளது. நம் தமிழகத்தில் ஏதாவது ஒரு பொருளைப் பற்றி பேச வேண்டுமானால் அதைப்பற்றி திரைத்துறையினர் பேசினால் போதும் என்ற அளவுக்கு நம் தமிழர்களுக்கு திரையுலகினர் மீது பித்துப் பிடித்து அலைகின்றோம். அவர் சமூகவியல் சார்ந்து ஏதாவது ஆராய்ச்சி செய்துள்ளாரா, சமூக பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் பற்றிய ஆராய்ச்சி படிப்புகள் ஏதாவது படித்துள்ளாரா அவரின் இந்த விஷயம் பற்றிய விஷய ஞானம் என்னவென்பதை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொள்வதில்லை. அவர் சார்ந்த சமூகம் அல்லது அவர் சர்ந்த அரசியல் சித்தாந்தம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒன்று ஆதரிக்கவோ எதிர்க்கவோ கிளம்பிவிடுவோம். அனைவரும் சமூகவியல் வல்லுநர்களாக மாறி ஒவ்வொரு கருத்துக்களை வைத்திடுவோம். இவற்றில் தர்க்க ரீதியாக எது சரியானது எது தவறானது என்பதெல்லாம் நமக்கு அவசியமில்லை.
விவாதப்பொருள் சார்ந்த துறை வல்லுநர்கள் கூறும் விஷயங்கள் அனைத்தும் புறம் தள்ளப்பட்டு அரசியல் மற்றும் சாதி இங்கு முன்னிருந்த்தப்படும். இதுதான் ஊடகத்திற்கும் சாதி அரசியல் செய்யும் பாசிச கூட்டத்திற்கும் அவசியமானது என்று தெரியாமலேயே பெரும்பாலானோர் ஆதரித்தோ எதிர்த்தோ ஒரு அணியாகத் திரண்டுவிடுவோம்.
உணவு பழக்கங்கள் அவர்கள் வாழ்ந்த பகுதியில் கிடைக்கும் பொருட்களை சார்ந்தே முதலில் இருந்திருக்கும். பின்னர் பிறபகுதிகளிலிருந்து பொருட்கள் வரும் போது அதைச் சுவைத்து அது பிடித்திருந்தால் அதைப் பயன்படுத்தும் வழக்கம் ஏற்படும். தக்காளி, புளி, கத்தரிக்காய், உருளை என்று பல பொருட்கள் நம் தேசத்தின் பொருட்கள் அல்ல மற்ற தேசத்தில் இருந்து வந்தவை. அவற்றை சிலர் ஏற்றுக்கொள்வதும் சிலர் மறுத்துவிடுவதும் பின்னர் அவர்களின் வம்சாவளியினர் அதையே பின்பற்றுவதும் இயற்கை.
மேலும் ஒரு உணவைத் தயார் செய்ய ஆகும் செலவு நேரம் ஆகியவற்றைப் பொருத்து அதன் பயன்பாடு அதற்குத் தகுந்த பொருளாதாரத்தைக் கொண்ட குடும்பங்களில் இருக்கும். ஒரு காலத்தில் அரிசி மிகக் குறைவான உற்பத்தி இருந்தகாலத்தில் அதன் பயன்பாடு அரிதான ஒன்றாக இருந்தது. பொருளாதார ரீதியில் வசதியுள்ளவர்கள் மட்டுமே தினம் அரிசி சோரு சாப்பிடக்கூடிய நிலையில் இருந்திருப்பர். இது சாதி வேறுபாடுகளைக் கடந்து பொருளாதாரத்தை அடிப்படையாகக் கொண்டதாக இருக்கும். அக்காலங்களில் நெல் விளைவிப்பவர் தன் நிலத்தில் பணிபுரியும் தொழிலாளிகளுக்கு நெல்லைத்தான் கூலியாகக் கொடுத்தார்.அந்த நெல்லை அரிசியாக்கி உண்ணத் தடை ஏது இருந்திருக்காது. ஆனால் நெல்லுக்கு மதிப்பு கூடுதலாக இருந்ததனால் அதை மற்ற பொருட்களுக்கு ஈடாக அதை விற்று மற்ற பொருட்களை வாங்கிக்கொள்ள அதைப் பயன்படுத்தியமையால் அதைவிட எளிதாக கிடைக்கக் கூடிய சிறுதானியங்களை மக்கள் பயன்படுத்தியிருக்கலாம்.
நான் சிறுவனாக இருக்கும்போது தோசை இட்லி போன்றவை அரிதான பொருட்களாகத்தான் எனக்கு இருந்தன. நான் வளர்ந்தது என் பட்டியிடம் என்பதால் அக்காலத்தில் தினம் ஆட்டுக்கல்லில் அவரால் தோசைக்கோ இட்லிக்கோ மாவைத் தயார் செய்வது இயலாத காரியம். இதுபோன்று வீட்டில் கணவன் மனைவி இருவரும் வேலைக்குச் சென்றால் அவர்களாலும் இது போன்ற பலகாரங்களுக்கு நேரத்தைச் செலவு செய்ய இயலாது. ஏன் நான் நான் இருந்தது அக்கிரகாரம் போன்று அதிக பிராமணர்களும் சில மற்ற சாதியினரும் வசித்த தெரு. சிலர் வீட்டில்தான் ஆட்டுக்கல் இருக்கும். எங்கள் வீட்டில் மற்ற வீட்டுப் பெண்கள் தானியங்களை கோண்டுவந்து மாவை அரைத்துச் செல்வது வழக்கம். இதில் சாதி பாகுபாடு என்பதை விட இடவசதி, பொருள் வசதி, அவர்கள் குடும்பத்தில் பெண்களால் நேரம் செலவிட முடியுமா என்பதை பொறுத்தே அமைந்தது. மெல்லிய தோசைக்கு ஒரு சாதி தடி தோசைக்கு ஒரு சாதி என்ற பேத்தல்கள் எவ்வளவு உள்நோக்கம் கொண்டவை என்பதைச் சற்று யோசித்தால் தெரியும். இந்த முறுவல் தோசையெல்லாம் சில 10 ஆண்டுகளுக்கு முன்னால் ஹோட்டல்களால் அறிமுகப்படுத்தப்பட்டவையே. பெரும்பாலும் அனைத்து வீடுகளிலும் தோசை சதாரணமாக இரண்டுபக்கமும் திருப்பிப்போட்டு வேகவைத்த மிருதுவான தோசையாகத்தான் இருந்தது.
நான் முந்திரிக்காகப் பொங்கலை கிளறி கிளறி பாரத காலம் ஒன்று உண்டு. அதே காலத்தில் என் நண்பன் சற்று வசதி கூடுதலான குடும்பத்தைச் சேர்ந்தவன் சாதிபடி இன்று பட்டியல் இனம் என்று சொல்லும் சாதியைச் சேர்ந்தவன். அவன் வீட்டிற்குச் சென்றால் சும்மாவாவது டீவி பார்த்துக்கொண்டு கொரிக்க முந்திரி வறுவல் இருக்கும். இன்று என் பொருளாதாரம் சற்று முன்னேறிய பிறகு தேங்காய் சட்டினியில் முந்திரி சேர்த்து அறைக்க முடிகிறது.

இன்று அரிசியோ ஏனைய தானியங்களோ நமக்கு எல்லோராலும் வாங்கக் கூடிய நிலையில் உள்ளது என்றால் அதற்கு நாம் சுதந்திரம் அடைந்த பிறகு நம் அரசுகள் மேற்கொண்ட கொள்கையால் உற்பத்தி அதிகரித்ததும், வேலை வாய்ப்பு பெருகியதும் காரணம். MS சுவாமிநாதன் போன்ற அறிஞர்கள் கொண்டுவந்த திட்டங்கள் ஆராய்ச்சிகள் முக்கிய காரணம். இன்னும் இது போன்ற அறிஞர்களைக் கண்டுபிடிப்பதும் ஊக்குவிப்பதும் மேலும் கல்வி கேள்வியில் அனைவரும் சிறந்து அனைவருக்கும் பொருளாதாரம் உயர முயற்சி செய்வதுமே சிறந்த செயலாகும் அதுதான் சமுதாயத்திற்கு பயனுள்ள சமுகவியல் செயல்பாடாகா அமையும். அதை விடுத்து காபியிலும் தோசையிலும் சாதியை பார்ப்பது நம்மைப் பின்னோக்கிய பயணத்திற்கே இட்டுச்செல்லும்.

ஒருகாலத்தில் பழங்குடியினர் பயன்படுத்திய காளான்கள் இன்று மேட்டுக்குடியினரின் உணவாகவும் அன்று மலிவானதாகக் கருதப்பட்ட மக்காச்சோளம், வரகு சாமை போன்றவை உயர்தர உணவகமும் மாறிவிட்ட இச்சூழ்நிலையில் உணவுடன் சாதியை பேசுவது ஒன்று அறிவற்ற செயலாக இருக்க வேண்டும் அல்லது சாதிய மோதலுக்குத் தூபம் போட்டு அதில் குளிர்காய நினைக்கும் தீய உள்நோக்கம் கொண்ட செயலாகத்தான் இருக்க வேண்டும்.